Pages

Thursday, June 27, 2013

sudhakumaar: தமிழ் சினிமா ஒர் பார்வை

sudhakumaar: தமிழ் சினிமா ஒர் பார்வை:  தலைப்பைப் பார்த்துவிட்டு எல்லோரும் கூறுவதைத்தானே நீயும் எழுதப் போகிறாய் என்று தயவு செய்து  எண்ணவேண்டாம். முழுவதைய்ம் படித்து விட்டு உங்கள்...

தமிழ் சினிமா ஒர் பார்வை

 தலைப்பைப் பார்த்துவிட்டு எல்லோரும் கூறுவதைத்தானே நீயும் எழுதப் போகிறாய் என்று தயவு செய்து  எண்ணவேண்டாம். முழுவதைய்ம் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

   தமிழ் கூறும் நல்லுலகிற்கு  இன்றைய ஜீவனம் நல்ல படியாக முடிகிறதோ இல்லையோ தங்களின் திரையுலக நாயகர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரார்த்தனை. அவ்வாறு இவர்கள் காலம்  கழிக்கையில் அவ்ர்களுக்கு தனது ரசிகர்களைப் பற்றிய அபிப்ப்ராயம் என்ன?

   பொதுவாக தங்கள் படம் திரையிடப்படும் நாளிலிருந்து  (இப்போது வெற்றிகரமான ஒன்றாவது வாரம்)100வது, 150.....வரை இவர்களின் வெற்றிக்கு ரசிகர்கள் அரும் பாடு படுகிறார்கள். ஆனால் இந்த  நாயக நாயகிகளோ தங்களின் வெற்றிக்கு உழைத்த இந்த ரசிகர்களை பிறந்த நாள் அன்று காத்துக்கிடந்தால் கூட சந்திப்பது இல்லை. அல்லது வரவேண்டாம் என்று அறிக்கை விட்டுவிட்டு எங்கேனும் அமைதியாக குடும்பத்துடன் கழிக்கின்றனர்.

    சரி வெளிவரும் படங்களில் எத்தனைப் படம் நல்ல கதையம்சத்துடன் வெளிவருகிறது? பெரும்பாலும் ஒரேகதை. ஒன்று காதலி பணக்காரியாக இருப்பாள் காதலன் ஏழையாக இருந்து காதலியின் தந்தையால் அவமானபடுத்தப்பட்டு ஒரே பாடலில் பணக்காரனாகி பழிதீர்ப்பான். அல்லது காதலி ஏழையாக இருந்து  பணக்காரகாதலனை கைபிடிப்பதாக சபதம் செய்து வெற்றியும் பெருவாள். இதற்கிடையில் டூயட், தீ மிதி எல்லாம் உண்டு.
http://www.valaipookkal.com/
  இந்த மாதிரி கதையம்சம் உள்ள எத்தனைப் படங்கள் வெற்றி பெறும்? பெரும்பாலும்  தோல்விதான். சரி இவர்கள் நல்ல விஷயங்களாவது சொல்லித்தருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. குடிப்பதற்கும், சிகரட் பிடிப்பதற்கும் கொள்ளையை நூதனமாக செய்வதற்கும் தான் சொல்லித்தருகிறார்கள். மது, சிகரெட் போன்றவை உடல் நலத்திற்கு கேடு என்று வாசகம் எழுதிக் காண்பித்தால் மட்டும் போதாது.  கண்டிப்பாக அக்காட்சிகளுக்கு  சென்சாரில் தடைவிதிக்கவேண்டும். கண்டிப்பாக பாடல் காட்சிகளில் உடைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். வரிகள் இரட்டை அர்த்தம் இல்லாமை இருக்க வேண்டும். வசனங்களை MUTE செய்யக்கூடாது.  
இவையெல்லாம் இந்தியாவில் உள்ள எத்தனையோ மக்களின் கனவு. 

  ஆனால் மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லி இப்படி கேவலமான படங்களை தயாரித்து அதை நாமும் பார்த்துத் தொலைத்தால் நமது கனவு என்றுமே கனவு தான்

Tuesday, June 25, 2013

முன்னோர்கள் முட்டாள்களா?-- பகுத்தறிவாளர்களிடம் ஒரு கேள்வி.

http://blog.maatru.net/    கேதார்நாத் கோவிலைச் சுற்றியுள்ள அத்தனை இடங்களும் முற்றிலுமாக அழிந்திருக்க கோவில் அப்படியிருப்பது வியப்பிற்குரிய விஷயம். புராணங்களின் அடிப்படையில் யுக யுகமாக இருந்துவரும் இக் கோவில் இதைப் போன்று பலமுறை விபத்துக்களை சந்தித்துள்ளது.

  இன்று இருக்கும் வசதிகள் போல் நம் முன்னோர்கள் காலத்தில் இல்லை. சாட்டிலைட்டோ அல்லது மிகப் பெரிய கிரேனோ அல்லது பொக்கலைங்களோ அன்று இல்லை. ஆனாலும் அவர்கள் கட்டிய கோவில்கள்  இன்றுவரை அற்புதமாக காலம் கடந்தும் நம் முன்னோர்களின் வரலாற்றை பறைசாற்றி வ்ருகிறது.

  ஆனால் பகுத்தறிவு என்ற பெயரில் இன்று நம் மக்கள்,முன்னோர்களின் செயலை இகழ்ந்து பேசுவதும், அவர்கள்  சம்பிரதாயம் என்ற பெயரில் உள்ளவற்றை மூட நம்பிக்கை என்று பேசி வருவதும் வருத்ததிற்குரிய செயல். காற்றின் திசையயும் அது வந்து போகும் நிலையை கணக்கிடுவதற்கு "வாஸ்து" என்று பெயரிட்டனர். இருக்கும் இடத்தைப் பொருத்து மனையடி சாஸ்திரமானாலும் சரி வாஸ்துவானாலும் சரி அமைக்கப்பட்டிருக்கும்.

  இதை மூட நம்பிக்கை என்று கூறுபவர்கள் நமது தேசத்திற்கே ஒத்துவராத சீன வாஸ்து என்ற பெயரில் வாயில் நுழையாத "சாங் -சூங்" களை விற்பனை செய்கின்றனர். இவையெல்லாம் சரி இவர்களின் மொத்த புத்திசாலி -தனத்தையும் காட்டிக் கட்டிய கட்டிடங்கள் எல்லாம் பலமாக இருக்கின்றனவா? என்பது ஒரு மிகப் பெரிய கேள்வி. அந்தக் காலத்தில் உப்புக் காற்றிலிருந்து காப்பாற்ற எந்தவிதமான பெயிண்டுகளும் இல்லை. ஆனால் கட்டிடம் துளிக் கூட சீர் கெடவில்லை.  இன்று குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பெயிண்ட்கள் அடித்தும் பராமரித்தும் வந்தாலும் அவை புயல், மழை, வெயிலுக்குத் தாங்குவதில்லை.

  பகுத்தறிவு என்பது என்ன என்று தெரியாமலேயே தங்களை பகுத்தறிவு வாதிகளாக காட்டிக் கொள்பவர்களே அடுத்தவர்களின் நம்பிக்கையை  இகழ்ந்து பேசுவதும் பகுத்தறிவற்ற செயல் என்பதை புரிந்து கொள்ளுங்க்ள். முன்னோர்கள் யாவரும் முட்டாள் அல்ல. எந்த ஒரு செயலை அவர்கள் செய்யும் போதும் அந்த செயலாகவே மாறிச் செய்தனர். ஒவ்வொரு கோயிலையும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவே கட்டியள்ளனர். அதில் எந்த ஒரு சுயநலமுமின்றி எதிர்கால மக்களின் நலன்களையும் சேர்த்து உருவாக்கியுள்ளனர்.

   எனவே பகுத்தறிவு வாதிகளே இனியாவது எதையும் சரியாக புரிந்து கொண்டு பேசுங்கள். இல்லையெனின் நீங்களும் இகழப்படும் காலம் வெகுத்தூரத்தில் இல்லை.

"தார்மீகமா"? "தலைகனமா"?

 உத்தரகண்டில் இயற்கை ஒரு ருத்ர தாண்டவம் ஆடியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஆன்மீக அன்பர்கள் தரிசனத்திற்கு  வந்து பரிதவித்து நிற்கின்றனர். இதில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந் நிலையில் ராணுவம் பெரும் முயற்சி எடுத்து மக்களைக் காப்பற்றி வருகிறது.

    இதற்கிடையில் எந்த ஒரு முதல்வரும் செய்யாத ஒரு காரியத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செய்துள்ளார். துணிச்சலாக களத்தில் இறங்கி அவர்    15000 பேரைக் காப்பாற்றியுள்ளார். அதுவல்லாது மேலும் உதவி வேண்டுமா என்று கட்சி பேதமின்றி காங்கிரஸ் முதல்வரை சந்தித்துக் கேட்டுள்ளார்.

  அதை நாகரிகமாக தவிர்த்துள்ளார் அம்மாநில முதல்வர். இத்துடன் நிறுத்தியிருகலாம் காங்கிரஸ். மேலும் மோடியை விமர்சித்து இருப்பது  காங்கிரஸ்காரர்களின் மட்டமான புத்தியையே காட்டுகிறது. எல்லா மாநில மக்களும் கட்சி பேதமின்றி உதவியள்ளனர். திகார் சிறை கைதிகள் கூட தங்களது பங்களிப்பாக ரூ.10 லட்சம் கொடுத்து உதவியள்ளனர்.

    ஆனால் ரூபாய் மட்டுமே உதவி ஆகிவிடாது என்பதை உணர்ந்த மோடி மனித உதவி முதல்  எந்திர உதவி வரை எல்லாவிதமான உதவிகளையும் செய்வதாக கூறியுள்ளதற்கு அரசியல் சாயம் பூச காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்.
 
     ";ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி " என்று ஒற்றுமைக்கு உதாரணமாக நம் நாடு திகழ்கிறது. அது கிரிகெட்டாக இருந்தாலும் சரி கார்கில் போராக இருந்தாலும் சரி.  ஆனால் காங்கிரஸைப் பொறுத்தவரை கட்சியையே இத்தாலியிடம் அடகு வைத்தப்பின் "அந்நியர் வந்து புகல்வதே நீதி" என்பவர்களிடம் இந் நாட்டுமக்கள்  என்னவிதமான மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்? 

Sunday, June 23, 2013

"மாற்றவேண்டுமா பள்ளிகளின் வேலை நேரத்தை"

 இன்று காலையில் ஒரு செய்தி உலா வந்தது. அதன் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப்பள்ளிகளும் நாளை முதல் மாற்றப்பட்ட நேரத்தில் இயங்கும்  என்பது தான். ஆனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே அப்படி ஒன்றும் இல்லை என்று பள்ளிக் கல்வி இயக்குநகரகம் செய்தி வெளியிட்டது.

   ந்டைமுறையில் இந்த மாற்றம் எப்படி இருந்தால் பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று பார்க்கலாம்.

   1. கர்நாடகா, மகாராஷ்டிரா,போன்ற மாநிலங்களில் உள்ளது போல் shift system ஐ நடைமுறைப் படுத்தலாம். இதன்படி சிறு குழந்தைகள் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை  பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதால் சற்று ஆர்வமாக செல்லும்

2. இரண்டு பிரிவாக செல்லும் போது பேருந்துகளில் இட நெருக்கடி குறையும்.

3. தாய்மார்கள் தங்கள் வீட்டு வேலைகளை சற்று நிதானமாகச் செய்யமுடியும். கணவன், மற்றும் குழந்தைகள் என இருவரையும் ஒருசேர கவனிக்க வேண்டியது இல்லை.

4. 7 மணிமுதல் 2 மணி வரை என்று மாற்றப்பட்டால் பெரிய அளவில்  குழந்தைகளுக்கோ அல்லது பெற்றோர்களுக்கோ பயன் தராது. 7 மணி பள்ளிக்கு கிராமப்புற மாணவர்கள் 5 மணிக்கே தயாராக வேண்டும்.

    இது பள்ளிகளில் பாடங்களை கவனிப்பதற்கு பதிலாக தூக்கத்தையே வரவழைக்கும். இதற்கு தற்பொழுதுள்ள நேர விதிகளே எளிதானதாக இருக்கும்.

   வீட்டுப் பாடங்களைக் கொடுக்காமல் இருப்பதன் மூலம் வீட்டிற்கு வந்து அன்று நடந்த பாடங்களை அன்றே படிப்பது என்பது எளிதாக இருக்கும்.
special class என்ற பெயரில் காலை 7மணிமுதல் இரவு 9 மணி வரை 12 வகுப்பு, 10 வகுப்பு மாணவ மாணவியர்களை வதைப்பதை தடுத்தல் , எல்லா சனிக்கிழமை களும் கண்டிப்பான விடுமுறை போன்றவற்றை நடைமுறை படுத்துவதன் மூலமும் குழந்தைகள் வேறு ஏதாவது கற்றுக் கொள்ளமுடியும்.

   இதையெல்லாம் விடுத்து  நேரத்தை முன் கூட்டி வைப்பதால் யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக தூக்க கலக்கதில் குழந்தை பஸ்ஸிலிருந்து  தவறி விழுந்தது. என்ற செய்தியையே அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும். அரசு சிந்திக்குமா?

Friday, June 21, 2013

எது புலனாய்வு- ஒரு பார்வை

 இன்றைய நாட்களில் புலனாய்வு பத்திரிகை (அ) exclusive coverage  என்ற பெயரில் நடக்கும் கூத்து காணக் கொள்ளாதது. இவர்கள் புலனாய்வு என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்கும் கேள்விகள் காதில் ரத்தம் வரச் செய்கின்றன. இதிலும் குறிப்பாக பாலியல் வன் கொடுமைக்கு ஆளானவர்களை இவர்கள் பேட்டி காணும் விதம் அந்த பாதிக்கப்பட்டவர்களை மேலும் புண்ணாக்கவே செய்யுமே தவிர ஆறுதல் அளிக்காது.

  இவர்களுக்கு அடுத்த படியாக பத்திரிகையாளர்களின் கடுமையான பாதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாபவர்கள் காவல் துறையினர்.. இவர்களின் கவர்ஸ்டோரிக்காகவும், exclusive , சிறப்புச் செய்திகளுக்காகவும் , காவல் துறையினரை கிட்டத்தட்ட தாக்கவும், ஆத்திரம் மூட்டும் வார்த்தைகளை உபயோகிப்பதும் எந்தவகை "புலனாய்வு" என்பது தெரியவில்லை. மேலும் இவர்களை காவல்துறையினர்  ஒரு வார்த்தை கூறினால் போதும் உடனடியாக காவல் துறையின் அராஜகம் ஒழிக என்று கூக்குரல் எழுப்பி ஆவேசப்படுகின்றனர்.

  பத்திரிகை நண்பர்களே உங்கள் வீட்டில் ஏதேனும் கொலை கொள்ளை அல்லது உங்கள் சகோதரிக்கோ அல்லது மகளுக்கோ பாலியல் பலாத்காரத் துயரம் ஏற்பட்டால் நீங்கள் இப்படி கூலாக, துருவி துருவிக் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா? சற்று யோசியுங்கள். பட்டையத்தை எடுத்தவன் பட்டையத்தால் சாவான் என்பது பழமொழி. நீங்கள் புலனாய்வு என்ற பட்டையத்தை எடுத்துள்ளீர்கள்  அந்தப் பட்டையம் உங்களை பாதிக்காவிட்டாலும், உங்கள் சந்ததிகளை பாதிக்கும். எமனாக மாறிவிடாமல் காத்துக் கொள்ளுங்கள்

Thursday, June 20, 2013

விலைவாசி ஏற்றம் - தமிழகத்தின் இன்றைய நிலை.

   சமீபத்தில் கேரளா சுற்றுப்பயணம் செல்ல நேர்ந்தது.  அங்கு நிலவும் விலைவாசியை உற்றுப்பார்க்கும் போது தமிழகத்தில் நிலவும் விலை வாசி அதிகமோ என்று தோன்றியது. இத்தனைக்கும் தமிழகத்திலிருந்து தான் எல்லாப் பொருட்களும் தமிழ்நாட்டிலிருந்து தான் செல்லவேண்டும்.

  ஒரு unlimited meals Rs.60/-க்கு தயிருடன் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியம்?  விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வு தான் காரணம் என் சொல்லுகின்றனர் ஆட்சியாளர்கள். இந்த விலை உயர்வு இந்தியா முழுமைக்கும் தான். 

  ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் பெருக பெருக விலைவாசி உயருவது தவிர்க்கமுடியாத சக்தியாகிறது. அந் நிறுவனங்கள் தங்களின் வேலை தடையற நடக்க சம்பளத்தை அள்ளிக் கொடுக்கிறது. இதன் விளைவு விலைவாசி உயர்வும், அந் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மன அழுத்தமும் தான். 

   தீப்பெட்டி, பட்டாசு, பஞ்சாலை, மற்றும் சாயப் பட்டறைகளில் வேலை செய்பவர்கள் வாழ்க்கை நிலை வேறு மாதிரியாக உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தினக் கூலி அடிப்படையிலேயே உள்ளனர். அவர்களுக்கு அதிக சம்பளம், இலவச போக்குவரத்து, இலவசமாக தேநீர் என்று ஆசைகாட்டப் படுகிறது. பெரும்பாலன நிறுவனங்கள்  p.f.,  E.S.I.C போன்ற வசதிகளை வழங்குவதில்லை.  அவர்கள் நோய்வாய்பட்டலோ, அல்லது அகாலமாக இறக்க நேரிட்டாலோ அவர்களுக்கு எவ்வித உதவியும் கிடைப்பதில்லை.
   
   இருந்தும் இவைகளை நாடி மக்கள் செல்வதற்கு காரணம் விலைவாசி உயர்வும், ஒருசாண் வயிறும் தான். உணவுப்பொருட்கள் விலை கட்டுக்குள் வந்தாலே விலை வாசி கட்டுப்படுத்தப்படும்.  விவசாயநிலங்களை ப்ளாட்டாக மாற்ற தடை விதிக்கவேண்டும், விளைச்சலை அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும். உடனடி பணம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும் இந்திய பெரிய நிறுவனங்கள் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் கொள்ளையை தடுக்கவேண்டும்.

   இது போன்ற சீர்திருத்தங்கள் எதுவும் செய்யாமல் வெறுமனே ஒருவர் மீது ஒருவர் குறை கூறிக்கொண்டிருந்தால்  விவசாயத்தை ஓராயிரம் நம்மாழ்வார்கள் வந்தாலும் காப்பாற்ற முடியாது. இதனால் விலைவாசி உயர்வை கட்டுக்கொள் கொண்டுவருவது என்பது எட்டாக் கனியாகவே இருக்கும்

Sunday, June 16, 2013

FATHER'S DAY - இது தேவையா?

 இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பத்து என்னவென்றால் இதுவரை நாம் நம் தந்தையை மறந்திருந்தோம். இன்று தந்தையர் தினம் கொண்டாடி "நம்முடன் இருக்கின்ற " தந்தையை நினைவு கூர்ந்தோம். வாழ்க.

  நம்நாட்டைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் குழந்தைகள் ஒருகுறிப்பிட்ட பருவம் வரை பெற்றோர்களோடே இருப்பார்கள் எனவே இது போன்ற போலியான ஒரு நாள் கொண்டாட வேண்டுமா? இதை நான் கூறுவதால்  FACEBOOK, மற்றும் TWITTER ல் இந்ததினத்தைக் கொண்டாடும் அன்பர்களின் கோபத்திற்கும், சாபத்திற்கும்  ஆளாக நேரிடலாம். எங்களது அன்பை குறை கூறுகிறாயா? என்று கேட்கலாம்.
 
     நான் உங்களின் அன்பைக் குறை கூறவில்லை. மாறாக உண்மையான அன்பு இந்த மாதிரி ஆராவாரம் எதுவும் செய்யாது  தக்க சமயத்தில் வெளிப்படுத்தும். "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய " இந்த பாரத பொன்நாட்டிற்குத் தேவையா  FATHER'S DAY யும்  MOTHER'S DAY யும். சிந்தியுங்கள். பெற்றோர்களே நீங்களே உங்கள் குழந்தைகளை அந்நியப் படுத்தாதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடியும்.

Monday, June 10, 2013

அத்வானி என்றெரு local தலைவர்

அத்வானி ராஜினாமா. இன்று ஊடகங்களுக்கு நல்ல விருந்து. கோவா கூட்டத்தைப் புறக்கணித்ததிலிருந்தே பல்வேறு ஹேஷ்யங்கள் நிலவி வந்த நிலையில் அத்வானி தன்னாலான ஒரு தொண்டை செய்துள்ளார்.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பா ஜ க ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதைப் பற்றி அவர் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஒரு சந்தர்ப்பம்   என்பது மோடி ரூபத்தில் வந்துள்ளது. அதற்கு  அத்வானியே ஆப்பு வைத்துவிடுவார் போல உள்ளது.

நீங்கள் துணைப்  பிரதமராக இருந்தபோது செய்தது என்ன? இன்றும் உங்கள் மேல் இந்தியர்கள் அனைவருக்கும் மிகுந்த மரியாதை உள்ளது.   ஆனால் நீங்கள் காப்பாற்றிக் கொள்வீர்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.  நாட்டையே அடகு வைக்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக உங்களை தேர்ந்தெடுக்க மக்கள் முடிவு செய்துள்ள நிலையில் நீங்களே உங்கள் தலையிலும் கட்சி தலையிலும் மண்ணை வாறித் தூற்றாதீர்கள். மூத்த தலைவர்கள் இளையவர்களுக்கு வழிவிட்டு அவர்கள் திறம்பட ஆட்சி செய்ய ஆலோசனை வழங்குங்கள்  அதை விடுத்து நானே தலைவன். நான் இல்லையென்றால் ஆட்சியே அமைக்காவிட்டலும் சரி என்று விபரிதமுடிவு எடுக்காத்தீர்கள். நல் ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் இப்படி செய்து மாநில கட்சி தலைவர்கள் போல் உங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்ளாதிர்கள். 

    உண்மையான இந்தியக் குடிமக்களின்  கருத்துக்கு மதிப்புகொடுப்பீர்கள் என அவர்கள் நம்புகிறார்கள். ஏமாற்றிவிடாதீர்கள்.

Saturday, June 8, 2013

சூதாடி விளையாடு பாப்பா

 பாரதி இன்று இருந்தால் "ஓடி விளையாடு பாப்பா" என்பத்ற்கு பதிலாக் "சூதாடி கிரிகெட் விளையாடு பாப்பா" என்று பாடியிருக்கலாம்.நெரிசல் மிகுந்த இந்நாட்களில் விளையாட்டு என்பதே அரிதாகிக் கொண்டு வருகிறது. இந் நிலையில் இந்த தேசத்தின் தலை சிறந்த விளையாட்டாகக் கருதப் படுவது கிரிக்கெட் மட்டுமே.  கிரிக்கெட் என்பது ஆங்கிலேயர்கள் வெயிலின் சுகத்தை அனுபவிப்பதற்காக உண்டான விளையாட்டு. இந்நிலையில் 42டிகிரி வெயில் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு ஏற்றது தானா? 

 அநேகமாக இப்பொழுதுள்ள பெரும்பாலான குழந்தைகள் கிரிக்கெட்டே நமது தேசிய விளையாட்டு என்று எண்ணும் அளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருகிறது. சரி 100 கோடி மக்கள் தொகை உள்ள நம்நாட்டில் மற்ற விளையாட்டு விளையாட ஆட்கள் இல்லையா என்றால் திறமை சாலிகள் பலர் இருந்தும் அவர்களுக்கு சரியான அங்கிகாரமும், ஸ்பான்சர்களும் கிடைப்பது இல்லை. மேலும் இதில் அரசியல் குறுக்கீடு வேறு.

  இந்தியர்கள் மற்ற விளையாட்டுக்களை அங்கீகரிக்கவில்லையா என்றால் அது வும் இல்லை. ஒலிம்பிகில் குறைந்த அளவு பதக்கங்கள் தான் நமது தேசம் பெற்றது. ஆனால் அந்தவீரர்களை நம் தேசம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. பலர் வெகுநேரம் கண்விழித்து பல விளையாட்டுக்களை கண்டு களித்தனர். 

   ஒரு சச்சினிக்கும் தோனிக்கும் கிடைக்கும் அளவிற்கு விளம்பரங்கள் சாய்னாவிற்கோ அல்லது விஸ்வநாதன் ஆனந்திற்கோ கிடைக்கவில்லை ஏன்? அதிலும் இவர்கள் உலக தரவரிசையில் முதலிடங்களில் இருப்பவர்கள்.  பெப்சியும் கோக்கும்  கிரிக்கெட் வீரர்க்ளை ஊக்குவிக்கும் அளவிற்கு மற்றவிளையாட்டு வீரர்களை ஊக்குவிக்காதது ஏன்? ஜெயிக்கின்ற குதிரை மீதுதான் பணத்தை கட்டவேண்டும் என்பார்கள். அதுபோல நம் நாட்டில் ஜெயிக்கின்ற குதிரையாக் கிரிக்கெட் இருக்கிறது. 

    இந்நிலைமாற அரசாங்கம் வெளிநாட்டுக் கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் போதே கிரிக்கெட் அல்லாத ஏதாவது ஒருவிளையாட்டை கண்டிப்பாக ஸ்பான்சர் செய்யவேண்டும் என்று வற்புறுத்தலாம். அவ்வாறு செய்தால் பல்வேறு திறமையான வீரர்கள் இந்த நாட்டிற்குக் கிடைப்பார்கள். 

   அரசியல்வாதிகள் தங்கள் பாக்கெட்டை நிரப்பிக்கொள்ளுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பதக்கப் பட்டியல் நிரம்பவேண்டும் என்பதையும் மனதில் கொள்ளட்டும் அவ்வாறு செய்தால் உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் தலை நிமிர்வதோடு , சூதாட்டம் போன்ற ஈனத்தனமான சர்ச்சையில் சிக்கி நமது மானம் பறிபோகாமல் காப்பாற்றப்படும் என்பது திண்ணம்.

Thursday, June 6, 2013

காமெடி சானல்களும், காம்பியர்களின் அட்டகாசமும்

கடந்த 05/06/2013 அன்று இரவு ஆதித்யா சானலில் double galatta என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதில் வழக்கம்போல தம் கட்டி பேசிக்கொண்டிருந்த இருவர் காமெடி என்ற பெயரில் கூத்தடித்தது அருவருக்கத்தக்கதாக இருந்தது.

   ஒரு மாணவன் பரிட்சை எழுத கஷ்டப்படுவது போலவும் அதற்கு ஆசிரியர் உதவுவது போலவும்,பதிலுதவியாக ஆசிரியையிடம் தாம் கூறுவதை அப்படியே கூறவேண்டும் என்று கேட்பது போல போய்க் கொண்டிருந்தது.

  அந்த வசனங்களை சகிக்க முடியாமல் வேறு சானல் மாற்றிவிட்டேன். இதை எத்தனை இரண்டுகெட்டான் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்? எத்தனை ஆசிரியரகள், ஆசிரியைகள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்? அவர்கள் மனம் என்ன பாடுபடும்? குழந்தைகளுக்கு ஆசிரியர், ஆசிரியைகள் மீது  என்னவிதமான அபிப்பிராயம் ஏற்படும்?

  ஏற்கனவே நெடுந்தொடர்கள் என்ற பெயரில் பல குடும்பங்களுக்குள் குழப்பத்தை விளைவித்துக்கொண்டிருக்கின்றனர். தனியார் தொலைக்காட்சிகளே உங்கள் TRP RATING என்றமாயைக்காக வரம்பு மீறாதீர்கள். யாரை வேண்டுமானாலும் புண்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள். அது ஒரு நாள் பஸ்மாசுரன் கதை போல உங்களுக்கேத் திரும்பும்

Tuesday, June 4, 2013

"யோகா" ஒரு பார்வை

   இன்றைய நாட்களில் யோகா வகுப்புச் செல்கிறேன் என்று சொல்வது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. சரி யோகா என்பது என்ன? அதன் பயன் என்ன? என்பது எத்தனை பேருக்கு சரியாகத் தெரிந்திருக்கும் என்பது ஒரு கேள்விகுரிய ஒன்று.

   யோகா என்பது ஒரு எளிய வகை மூச்சுப்பயிற்சி. அவ்வளவுதான். இந்த மூச்சுப்பயிற்சியை முறையாகச் செய்யும்போது ஏற்படும் உள்நிலை மாற்றமே பல வேறு நிகழ்வுகளிலிருந்து நம்மை தற்காக்கிறது.

   ஆனால் உண்மையில் இன்று இந்த வகுப்புகளுக்குச் செல்லுவோர் இருவகையான மனநிலையில் உள்ளனர். பெரும்பாலானவர்கள் தாங்கள் யோகா பயிற்சி செய்பவர்கள் என்று சொன்னாலே எதிரில் இருப்பவர்கள் தங்கள் காலில் விழுந்து விபூதி வாங்கிக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் தங்கள் நிலையைப் ப்ற்றி அறியாமலும், யோகாவின் தத்துவம் என்ன என்பதைப்பற்றி அறியாமலும் இருக்கின்றனர்.

    மற்றொரு வகையினர் யோகா செய்தாலே சாமியாரகப் போய்விடுவார்கள் குடும்பத்தைத் துறந்து தவிக்கவிட்டுச் செல்வார்கள் என்று தவறாக கணக்குப் போடுகிறார்கள். இவை இரண்டுமே தவறு. சரியான படி யோகாவை செய்தால் மன அழுத்தம் மற்றும் பல வகையான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

  பொதுவாக மன அழுத்ததிலிருந்து விடுபட்டாலே ரத்தக்கொதிப்பு ,சர்க்கரை நோய் போன்றவற்றிலிருந்து விடுபட முடியும்.மனம் சீராக இயங்க சுவாசம் முக்கியம். இதைத்தான் இந்தவகுப்புக்களில் பயிற்றுவிக்கின்றனர். இதைவிடுத்து இந்தவகுப்புகளுக்குச் சென்ற அடுத்தநாளே தம்மை சத்குருவாகவும் ,யோகிராஜாவாகவும் நினைத்துக் கொண்டால் அது நமது மடத்தனம். இந்தப்பயிற்சிகள்யாவும் நம் அன்றாட வாழ்வில் இருந்தது தான். அந்நிய மோகத்தில் இவற்றை நாம் விட்டுவிட்டோம்.

  ஒரு முறை "துக்ளக்"ஆசிரியர் "சோ"விடம் உங்களுக்கு தியானம் தெரியுமா? என்று கேட்டதற்கு, எனக்குத் தெரிந்த தியானம் :மத்தியானம்" தான் என்றார். அதுபோல யோகா என்னும் பயிற்சியைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளாமல், அதை புகழ்வதோ அல்லது தூற்றுவதோ, அதைகற்றுதரும் குருமார்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கட்சி கட்டிக் கொண்டு பேசுவதோ வெறும் காட்டுக்கூச்சலாகத்தான் இருக்கும். இதில் யாதொரு பயனும் இருக்காது.

Monday, June 3, 2013

கம்ப்யூட்டர் புலியா உங்கள் குழந்தை

 இன்றைய நாட்களில் கம்ப்யூட்டர் என்பது மிகவும் அத்தியாவசியமான பொருளாக உள்ளது. இதில் குழந்தைகள் மிகவும் ஆர்வமாகவும் வேகமாக புரிந்து கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். இவையெல்லாம் சரி உங்கள் குழந்தைகளை இவை எவ்வளவு தூரம் அடிமையாக்கி வைக்கின்றன என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

    போக்குவரத்தும் ஜனசந்தடியும் அதிகம் உள்ள இந்நாட்களில் குழந்தைகள் கம்ப்யுட்டரிலேயே படித்து, விளையாட்டி, வீரம் காட்டி, கம்ப்யூட்டரிலேயே பொழுதைக் கழிக்கின்றனர். இது அவர்களை அடிப்படையிலேயே பொறுமையற்றவர்களாக மாற்றுகின்றது.

   சாதாரண ஒரு கோவிலில் சிறப்பு தரிசன வரிசையில் கூட நிற்ப்பதற்குப் பொறுமையின்றி online ல் ticket வாங்கமுடியாதா என்று கேட்கும் நிலை உள்ளது. இத்ற்கு யார் காரணம்? பெற்றோராகிய நாம் தான். குழந்தை ஒரு பொதுவிடத்தில் 4பேர் முன்பாக இது esc key.இது alt key என்று சொல்லும்போது அக மகிழ்ந்து நிற்பதே இதற்குக் காரணம். பின்நாட்களில் இது சமுகவலைத்தளங்களில் உள்ள தீய சக்திகளின் தொடர்புக்கு காரணமாகிறது.

 குழந்தைகளுக்கு கம்ப்யூட்டரை கற்றுக்கொடுங்கள் அத்துடன் யதார்த்த வாழ்க்கையைக் கற்றுக்கொடுங்கள் வீட்டின் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைகளுடன் நிறையப் பேசுங்கள். குழந்தைகளை சிறு சிறு வேலைகளைச் செய்யச் சொல்லுங்கள்.மனதளவில் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க இது உதவும்.

  கம்ப்யூட்டர் மட்டுமே உலகமல்ல. நமது வாழ்க்கையில் ஒரு பகுதி. அவ்வளவுதான்.உங்கள் குழந்தைகள் கம்ப்யூட்டரில் புலி என்றால் கம்ப்யூட்டர் என்னும் கூண்டில் தான் அடைபட்டுகிடக்கவேண்டியிருக்கும். வெளி உலக அனுபவம் என்ற சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது.